Wednesday, December 30, 2015

பின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி?

வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு    ---  செ. அ. வீரபாண்டியன்


செ.அ. வீரபாண்டியன்: pannpandi@yahoo.co.in

மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, பெரியார், அம்பேத்கார் முதல் பாரதி, முத்துராமலிங்கத் தேவர் வரை அந்த வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்காதத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாடு உள்ளது. 

வழிபாட்டுப் புழுதியில் பாரதி சிக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்ப்போம்.
பாரதியின் கவிதைகளில் உள்ள இலக்கண அடிப்படையிலான குறைபாடுகள் பற்றி 1950களில் ஒரு புத்தகம் வெளிவந்து,  இன்று தேடினாலும் கிடைக்காத அளவுக்கு இருட்டில் உள்ளது. அவ்வாறு புத்தகம் எழுதியது தவறா? அல்லது அதை விவாதிக்காமல் , இருட்டில் சிக்க வைத்தது தவறா? பாரதியின் வழிபாட்டுப் புழுதியில்,  ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு இடம் கிடையாதா? அந்த போக்கு தான் இன்றைய எழுத்தாளர்கள் இலக்கண விதிகளை மதிக்காமல் எழுதுவதற்கு ( திரு. முருகனின் 'மொழிப் பார்வைகள்') வித்திட்டதா?

தமிழில் இலக்கணக் குறைபாடுகளுடன் கவிதைகள் எழுதி, அக்குறைகளைக் கண்டு கொள்ளாமல் பாராட்டும் போக்கும் பாரதியில் தான் துவங்கியதா என்பது ஆராயப்பட வேண்டும். 

ஒரு 'தலித்'த்த்ற்கு 'பூணூல்' அணிவித்து, 'பிராமணனாகி விட்டாய்' என்று அறிவித்த பாரதி, தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி, மணமுடித்த வேளையில், 'பொறுப்புள்ள பிராமண தந்தையாக' நடந்தது முரண்பாடில்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். பாரதியின் படைப்புகள் எந்த காலக் கட்டத்தில், எந்த‌ சமுக அரசியல் சூழலில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது, அதற்கு யார் யார் என்னென்ன காரணங்களுக்காக பங்களிப்பு வழங்கினார்கள் என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உணர்வுபூர்வகாற்றிலேயே தான் வழிபாட்டுப் புழுதி வலிமை பெற்று வளர்கிறது என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

"நாம் இப்படியே எவ்வளவு காலம் பேசிக் கொண்டிருக்கிறோம்? தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம்?" என்று, நான் பெரியார் இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு’ உணர்வுபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார். ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற திருச்சி பெரியார் மையத் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை வ‌ந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, அந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பான‌ நெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத‌  'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்வுபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர்.ஜெயகாந்தன் உள்ளிட்டு எந்த எழுத்தாளராவது தமிழின் மரணப் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கிறர்களா? தமது பிழைப்பிற்கான சமூக வட்டத்தில் உள்ளவர்களின் தவறுகளையும் இழிவுகளையும் பற்றி மெளனமாக இருந்து, உலகில் நடக்கும் 'கொடுமைகள்' பற்றி எழுதுவது 'முதலைக் கண்ணீர்' ஆகாதா? அத்தகையோரே தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி இதுவரை எழுதாதவர்களா? என்ற கேள்விகளும் ஆய்விற்குரியதாகும். அடுத்து பாரதிக்கும், அண்ணாவுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையைப் பார்ப்போம். 

பிரிவினைத் தடைச் சட்டம் வரப் போகிறது என்று தெரிந்தவுடன், தி.மு.க பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துக்கு எதிராக, 'பிரிவினையைக் கைவிடுகிறேன்; பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்று அறிவித்தார் அண்ணா. (உணர்வுபூர்வ போதையில் சிக்கிய‌ 'தனி நாடு' முயற்சிகள் பற்றிய விளக்கத்திற்கு:‘தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)-'தனி நாடு' உண்மையில் தனி நாடா?’;http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html ) 

காலனிய ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைக்காக உணர்வுபூர்வமாக வீரமாக பேசியும் எழுதியும் வந்த பாரதி,'எதிர்ப்பைக் கை விடுகிறேன்' என்று புதுச்சேரியில் உளவுத் துறை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, கைது செய்ய மாட்டார்கள் என்று நம்பி, கடலூர் வந்து கைதுக்குள்ளானார். அதன்பின் சிறையில் இருந்து காலனிய அரசுக்கு ஒரு மடல் எழுதினார். அதில் " பிரிட்டிஷ் அரசுக்கு என்றும் விசுவாசமாகவும், சட்டத்திற்கு கட்டுப்பட்டவனாகவும் நான் இருப்பேன். எந்த வகையான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன். இதனை மீண்டும் மாட்சிமை மிக்க அரசுக்கு உறுதி கூறுகிறேன். எனவே மாட்சிமைமிக்க அரசு உடனே என்னை விடுதலை செய்யுமாறு மன்றாடுகிறேன்." என்று முடித்துள்ளார். (I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding. I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life. I beg to remain
Your Excellency’s most obedient servant.
C. Subramania Bharathi) (முழு மடல் கீழே)

பின் விடுதலையாகி ஊருக்குத் திரும்பிய பாரதி ரவுலட் சட்டத்தையும் எதிர்க்க வில்லை; ஜாலியன்வாலா பாத் படுகொலையையும் கண்டிக்கவில்லை. பாரதி 'அரசியல் துறவு பூண்டதால்' அது தவறல்ல என்றும், மேற்குறிப்பிட்ட மடலை 'மன்னிப்பு' என்பதும், 'நிபந்தனையற்ற சரண்' என்பதும் பாரதியைக் கொச்சைப் படுத்துவதாகும் என்றும் இன்றும் பாரதி அன்பர்கள் வாதிடுகிறர்கள்.

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகக் குறைவானவர்கள் கலந்து கொண்டதற்கு  அவர் காலனிய அரசு எதிர்ப்பைக் கைவிட்டதும் ஒரு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதே ஆகும்.

ஆக அண்ணா 'பிரிவினை அரசியல் துறவு' மேற்கொண்டதற்கு முன்னோடியாக பாரதி இருந்துள்ளார். எனவே உணர்வுபூர்வமாக வீரமாக பேசி விட்டு, எழுதி விட்டு, பின் நெருக்கடி வரும்போது பின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி இருந்துள்ளார்."